Download PDF

சைவசித்தாந்த சண்ட மாருதம் சூளை. சோமசுந்தர நாயகர் [1846-1901]

Author : N Praburam

Abstract :

தமிழ் நிலம் சார்ந்த பழமையான சமயங்களாக அறியப்படுவன சிவ பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவம் என்னும் சைவசித்தாந்தமும், திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவம் என்னும் மாலியமும் ஆகும். சற்றேறத்தாழப் பக்தி இயக்கக் காலம் முதல் இக்காலம் வரையில் சைவ மற்றும் வைணவ சமய அடியார்கள் இடையே ஒரு மோதல் போக்கு நிலவி வருவதை நாம் அறிகிறோம். பதினான்காம் நூற்றாண்டில் தமிழகத்தைக் கைப்பற்றிய விசயநகரப் பேரரசினால் தமிழ்நாட்டில் ஆதிசங்கரர் வழிவந்த சங்கர வேதாந்திகள் செல்வாக்குப் பெற்றனர். மெய்யியல் தளத்தில் சங்கர வேதாந்திகளுக்கும் சைவ சித்தாந்திகளுக்கும் மெய்யியல் கருத்துகளில் முரண்பாடுகளும் அதன் காரணமாக மோதல்களும் தோன்றின. சைவர்களுக்கு எதிராக வைணவர்களும், சங்கர வேதாந்திகளும் செயல்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலானக் காலம் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் மிகவும் உச்சத்தில் இருந்தது. இந்தக் காலப் பகுதியில்தான் சென்னையிலுள்ள சூளை எனும் பகுதியில் பிறந்து தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பெரும் புலமை பெற்று விளங்கிய, ‘சைவசித்தாந்த சண்டமாருதம்’ என்று சேதுபதி மன்னர்களாலும், ‘பரசமயக் கோளரி’ என்று திருவாவடுதுறை ஆதீனத் தலைவராலும் போற்றப்பட்ட சூளை.சோமசுந்தர நாயகர் வாழ்ந்தார். வைணவர்களுடனும், சங்கர வேதாந்திகளுடனும் சொற்சமராடி சைவசித்தாந்த மெய்யியலை நிலைநாட்டியவர் சோமசுந்தர நாயகர். சைவசித்தாந்த மெய்யியலுக்கு அரும்பணியாற்றிய ஜே.எம்.நல்லசாமிபிள்ளை, தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் உள்ளிட்ட பேராளுமைகளுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கியவர் சோமசுந்தர நாயகர். வைதீக சமயத்தை முன்னெடுத்து இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளிலும் பரப்புரை செய்துவந்த வங்கத்து விவேகானந்தருக்கு சைவசித்தாத்தை ஆசங்கை அகல விளக்கியவர் சோமசுந்தர நாயகர். சைவசித்தாந்தச் சொற்பொழிவாளர், நூலாசிரியர் என பல தளங்களில் இயங்கித் தமிழ் மொழிக்கும், சைவசித்தாந்த மெய்யியலுக்கும் அரும்பணியாற்றிய சூளை.சோமசுந்த நாயகரின் வாழ்வையும், சைவசித்தாந்த மெய்யியல் பணிகளையும் ஆராயும் விதமாக இந்தக் கட்டுரை அமைகிறது.

Keywords :

பத்தொன்பதாம் நூற்றாண்டு, சைவசித்தாந்தம், சூளை.சோமசுந்தர நாயகர், மறைமலையடிகள்